புதுடெல்லி: மாநிலங்களவைக்கு 12 நியமன எம்பிக்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். அதில் 4 பேரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிதாக 4 பேரை நியமன எம்பிக்களாக ஜனாதிபதி முர்மு நியமித்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் இரவு அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம், கேரள பாஜ மூத்த தலைவர் சதானந்தன் மாஸ்டர் மற்றும் டெல்லியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகியோர் புதிய நியமன எம்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஷ்ரிங்லா அமெரிக்கா மற்றும் தாய்லாந்துக்கான இந்திய தூதராகவும், வங்கதேசத்திற்கான துணை தூதராகவும் பணியாற்றியவர்.
1984ம் ஆண்டு பேட்ஜ் ஐஎப்எஸ் அதிகாரியான இவர் 2023ல் ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்திய போது தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பத்ம ஸ்ரீ விருது வென்றவரான மீனாட்சி ஜெயின் டெல்லி பல்கலைக்கழகத்தின் கார்கி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.
முன்னாள் ஆசிரியரான சதானந்தன் மாஸ்டர், கேரளாவில் 2016 மற்றும் 2021ல் கண்ணூர் சட்டப்பேரவை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டவர். உஜ்வால் நிகம் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதாடியவர். புதிய நியமன எம்பிக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.