போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் அடித்து கொலை: போலீஸ் கண்முன் மக்கள் ஆவேசம், அருணாச்சலில் ஊரடங்கு உத்தரவு
இட்டாநகர்: அருணாச்சலபிரதேசத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்நிலையத்தில் இருந்து இழுத்து சென்று அடித்து கொன்றனர். அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சலபிரதேசத்துக்கு வந்த ஒரு வாலிபர், அங்கு லோயர் திபாங் பள்ளத்தாக்கில் உள்ள ரோயிங் நகரில் பணியாற்றி வந்தார். அந்த நபர் தான் தங்கி இருந்த வீட்டுக்கருகே உள்ள ஒரு பள்ளி விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த 6 முதல் 8 வயதுடைய சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் வயிற்று வலி போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது பாலியல் பலாத்கார சம்பவம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் காவல்நிலையம் முன் திரண்டனர்.
பின்னர் சிறையில் இருந்த குற்றவாளியை காவலர்கள் கண்முன்னே தர, தரவென வௌியே இழுத்து வந்து கடுமையாக தாக்கினர். இதில் அந்த நபர் உயிரிழந்தார். இதனால் ரோயிங்கில் நிலைமை பதற்றமாக உள்ளது. அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரோயிங் நகரில் கூடுதலாக நான்கு கம்பெனி பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேச உள்துறை அமைச்சர் மாமா நதுங், நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இதுபற்றி விசாரித்தார். மேலும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.