Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த வழக்கு; அஜித் தாக்கப்பட்ட இடங்களில் சிபிஐ ஆய்வு: முக்கிய சாட்சியாக தனிப்படை டிரைவர் சேர்ப்பு

திருப்புவனம்: போலீசார் தாக்கியதில் மடப்புரம் கோயில் ஊழியர் அஜித்குமார் இறந்த வழக்கில், அவர் தாக்கப்பட்ட இடங்களில் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியது. வழக்கில் முக்கிய சாட்சியாக தனிப்படை டிரைவர் சேர்க்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (28), விசாரணையின்போது உயிரிழந்த வழக்கில், தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கை சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக அஜித்குமார் தாக்கப்பட்ட கோசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து திருப்புவனம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம் விசாரித்தனர். காவல்நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான அனைத்துக் காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

நேற்று முன்தினம் மதுரை சிபிஐ அலுவலகத்தில் அஜித்குமாருடன் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் அருண், நண்பர்களான பிரவீண், வினோத், அஜித்தின் தம்பி நவீன்குமார், கோயில் ஊழியர் கார்த்திகைவேல் ஆகிய 5 பேரிடம், சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். நேற்று காலை 11 மணிக்கு சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், மூன்று அரசு வாகனம், இரண்டு தனியார் வாகனங்களில் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கு அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், நண்பர்கள் பிரவீன்குமார், வினோத் ஆகியோரை வரவழைத்தனர். இதுபோல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தனிப்படை போலீஸ் டிரைவர் ராமச்சந்திரனும் வரவழைக்கப்பட்டார். தனிப்படையினர் அஜித்குமாரை போலீஸ் வாகனத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது ராமச்சந்திரன் டிரைவராக இருந்தார். இவர் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இவரிடம் சிபிஐ அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தி அஜித்குமார் எங்கெல்லாம் அழைத்து செல்லப்பட்டார், எங்கெங்கு தாக்கப்பட்டார் என்பது உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர். தொடர்ந்து ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு, போலீஸ் வாகனம் சென்ற மடப்புரம் விலக்கு பாதை, வைகை பாலம் அருகே அங்காடி மங்களம் விலக்குப் பாதை, போலீஸ் ஸ்டேசன், அஜித்குமாரை அடித்ததாக கூறப்படும் இடங்களான தட்டான்குளம் அருகே வீட்டு மனை போடப்பட்டுள்ள இடத்துக்கு சென்றனர். இதுபோல், நான்குவழி சாலை நரிக்குடி பிரிவில் போலீசார் டீ குடித்ததாக கூறிய பேக்கரியில் உள்ள ஊழியர்களிடமும் விசாரித்தனர். தொடர்ந்து வலையனேந்தல் கண்மாய்க்கரை சென்று, அஜித்குமாரை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படும் புளிய மரத்தையும் சிபிஐ குழுவினர் ஆய்வு செய்தனர்.

விசாரணையின்போது, அஜித்குமாரை கோயில் நிர்வாக அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள கோசாலை ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்றோம் என டிரைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார். அதன்படி கோசாலையில் சிபிஐ ஆய்வு செய்தபோது, கைதான 5 போலீசாரில் யார் முதலில் அடித்தது. அஜித்குமாரின் சிதறிய ரத்த தடயம் மற்றும் சிறுநீர் கழித்த இடம், தண்ணீர் பாட்டில், அஜித்குமாரை அடித்தபோது உடைந்த பிளாஸ்டிக் பைப், சம்பவ இடத்தில் கிடந்த அஜித்குமாரின் செருப்பு ஆகியவற்றை தடயவியல் நிபுணர்களிடம் கொடுத்து ஆய்வு செய்தனர். சம்பவ இடத்தில் சிபிஐ குழு இருப்பது போன்று புகைப்படம், வீடியோ எடுக்கப்பட்டது. காலையில் தொடங்கிய சிபிஐ விசாரணை மாலை 6 மணிக்கு மேலாகவும் தொடர்ந்து நடந்தது.

அடித்தது எப்படி? நடித்து வீடியோ எடுத்த சிபிஐ

கோசாலையில் விசாரணை நடந்தபோது, எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது என சிபிஐ குழுவினர் விசாரித்தனர். அதற்கு அஜித்தின் நண்பர்கள், சிபிஐயிடம் தாக்குதல் தொடர்பாக விளக்கிக் கூறினர். அவர்கள் கூறியபடி, சிபிஐ அதிகாரி ஒருவர், அஜித்குமார் போல தரையில் அமர்ந்தார். அவரை போலீசார் போல மற்ற சிபிஐ அதிகாரிகள் சுற்றி நின்று அடிப்பது போல நண்பர்கள் கூறியபடி நடித்து காட்டினர். இதனை ஏற்கனவே அஜித்குமாரை தாக்கியபோது, வீடியோ எடுத்த ஜன்னல் வழியாக சிபிஐ குழு வீடியோவில் பதிவு செய்து கொண்டது.

வேனில் வெவ்வேறு நம்பர் பிளேட்

அஜித்குமாரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் டெம்போ டிராவலர் வேனின் எண் வெளிப்பகுதியில் டிஎன் 63ஜி - 0491 என்று உள்ளது. சிபிஐ போலீசார் வேனின் உள்ளே ஏறி ஆய்வு செய்தபோது, டிஎன் 01ஜி - 0491 என்ற நம்பர் பிளேட் ஒன்று கிடந்துள்ளது. இதை கைப்பற்றிய சிபிஐ, இதில் எது உண்மையான நம்பர் பிளேட் என்று விசாரணையை தொடங்கி உள்ளது.