*எம்எல்ஏ பங்கேற்பு
சித்தூர் : ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கூட்டணி அரசு செய்த சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி, சித்தூர் 19, 30வது வார்டில் உள்ள காஜூர், கொண்டமிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ குரஜாலா ஜெகன்மோகன் தலைமை தாங்கி வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தலின் போது சூப்பர் சிக்ஸ் என்கிற வாக்குறுதியை வழங்கினார். தொடர்ந்து அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒரு வருடத்திலேயே சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளான படித்து வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, வருடத்திற்கு மூன்று இலவச சிலிண்டர், முதியோர் உதவித்தொகை ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்.
கடந்த ஆட்சியில் அம்மா ஓடி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.13 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்களோ, அத்தனை பேருக்கும் ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதன்படி கடந்த ஆண்டு நிலுவையில் இருந்த தாய்க்கு வணக்கம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கினார். அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஆந்திர மாநிலம் முழுவதும் பெண்களுக்கு அரசு பேருந்து இலவச பயணம் திட்டத்தை தொடங்க வைக்க உள்ளார்.
அதேபோல் கடந்த ஆட்சியில் மாநிலம் முழுவதும் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக இருந்தது. முதல்வர் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றவுடன் மாநில முழுவதும் அனைத்து சாலைகளை சீரமைத்தார். மாநில மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக எம்எல்ஏ குரஜாலா ஜெகன் மோகன் ஏழைஎளிய மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார்.இதில் மாநகராட்சி மேயர் அமுதா, சூடா சேர்மன் கட்டாரி ஹேமலதா, தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் வசந்த் குமார், உள்பட ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.