Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் 2வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது: வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தல்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிவருவது குறித்தும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் மக்களவை நாள் முழுவதும் முடங்கியது. இதைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம் நடத்த ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது. இந்நிலையில், 2வது நாளாக நாடாளுமன்றம் நேற்று கூடியது. மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், பீகாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி மறுத்தார். இதனால் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இந்த அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 12 மணிக்கு அவை தொடங்கியதும், நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சிகளின் நடத்தையை கண்டித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். ஆனால் அலுவல் பட்டியலில் வாக்காளர் பட்டியல் விவகாரம் இடம் பெறாததால் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளி செய்தனர்.

இதன் காரணமாக மேலும் 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல மாநிலங்களவை காலையில் கூடியதும், பஹல்காம் தாக்குதல் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தனர். இது குறித்த 12 நோட்டீஸ்களையும் துணை தலைவர் ஹரிவன்ஸ் நிராகரித்தார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இந்த அமளியால் 3 முறை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடரின் 2வது நாளான நேற்று ஒரு அலுவல்கூட நடக்காமல் இரு அவைகளும் முடங்கின.

* நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை கண்டித்து நாடாளுமன்ற நுழைவாயில் அமைந்துள்ள மகர் துவாரின் படிகளில் நின்றபடி எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் திமுக, ஆர்ஜேடி, திரிணாமுல் காங்கிரஸ், ஜேஎம்எம் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள், ‘‘முதலில் மகாராஷ்டிராவில் வாக்காளர்கள் பலரை சேர்த்து மோசடி செய்யப்பட்டது. இப்போது பீகாரில் வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதன் மூலம் மோசடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் வாக்குரிமையை பறிக்கும் சதி நடக்கிறது. இது தேர்தலை திருடுவதற்கு சமம்’’ என இந்தியர்களின் உரிமை திருடப்படுகிறது, இந்திய குடியரசு தகர்க்கப்படுகிறது என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியபடி கோஷமிட்டனர்.

* போக்கிரித்தனம் செய்கிறார்கள்

எதிர்க்கட்சிகளின் போராட்டம் குறித்து ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், ‘‘அரசியலமைப்பு நிறுவனமான தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பை வைத்து போக்கிரித்தனம் செய்கின்றன. அரசியலமைப்பை காலடியில் போட்டு மிதிக்கிறார்கள். ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினர் என யாராக இருந்தாலும், வாக்களிக்கும் உரிமையைப் பெற எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்களா?’’ என கேள்வி எழுப்பினார்.