புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கையை விரைவில் ஒன்றிய அமைச்சரவை முன்பு வைத்து விவாதிக்க சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பல்வேறு தரப்பினரிடமும், அரசியல் கட்சிகளிடமும் விவாதித்து கடந்த மார்ச் 10ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்பின் மக்களவை தேர்தல் நடந்து முடிந்து பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் மோடியின் 100 நாள் செயல் திட்ட அடிப்படையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கையை மிகவிரைவில் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் வைத்து விவாதித்து முடிவு எடுக்கவும், அதன் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவும் சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் ராம்நாத் கோவிந்த் குழு வழங்கிய பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்காக அமல்படுத்தும் குழுவை அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement


