திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்ட இங்கிலாந்து போர் விமானத்திற்கு ஒரு நாள் பார்க்கிங் கட்டணம் ரூ.26,261
திருவனந்தபுரம்: கடந்த மாதம் 14ம் தேதி இந்திய பசிபிக் கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து நாட்டு எப் 35பி ரக போர் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய முடியாததால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் முயற்சியில் லண்டனில் இருந்து வந்த இன்ஜினியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த போர் விமானத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்துவதற்கான பார்க்கிங் கட்டணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு நாளைக்கு திருவனந்தபுரம் விமானநிலையத்தை நிர்வகிக்கும் அதானி குழுமத்திற்கு ரூ. 26,261 பார்க்கிங் கட்டணமாக செலுத்த வேண்டும். அனேகமாக வரும் 22ம் தேதி இந்த விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று கூறப்படுகிறது. அதுவரை 38 நாட்களுக்கான பார்க்கிங் கட்டணம் சுமார் ரூ. 10 லட்சம் ஆகும்.