ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி சட்டப்பேரவை தலைவராக உமர் ஒருமனதாக தேர்வு: 4 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவு
நகர்: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் சட்டப்பேரவை தலைவராக உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பார் என அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்தார். இந்நிலையில் தேசிய மாநாட்டு கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பரூக் அப்துல்லா, “கட்சியின் சட்டப்பேரவை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று(நேற்று) நடந்தது.
இதில் தேசிய மாநாட்டு கட்சி சட்டப்பேரவை தலைவராக உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உமர் அப்துல்லா, “என் மீது நம்பிக்கை வைத்து பேரவை கட்சி தலைவராக என்னை தேர்ந்தெடுத்த கட்சி உறுப்பினர்களுக்கு என் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை கூறி கொள்கிறேன். ஆட்சி அமைக்க உரிமை கோர எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. காங்கிரசிடமிருந்து ஆதரவு கடிதம் கிடைத்தவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவேன்” என்று தெரிவித்தார். இதற்கிடையே சுயேச்சை எம்எல்ஏக்களில் 4 பேர் உமர் அப்துல்லாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.