Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜவில் சேராவிட்டால் கைது செய்வோம் திரிணாமுல் தலைவர்களை மிரட்டுகிறது என்ஐஏ, ஈடி: மம்தா குற்றச்சாட்டு

புருலியா: ‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜவில் சேர வேண்டுமெனவும், இல்லாவிட்டால் கைது செய்வோம் என ஈடி, என்ஐஏ போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் மிரட்டுகின்றன’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புருலியா மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்தல் பேரணியில் பேசியதாவது:

அமலாக்கத்துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் வருமான வரித்துறை ஆகியவை பாஜவின் ஆயுதங்களாக செயல்படுகின்றன. இத்தகைய விசாரணை அமைப்புகள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜவில் சேர வேண்டும், இல்லாவிட்டால் கைது செய்வோம் என மிரட்டுகின்றன.

முன்னறிவிப்பு இல்லாமல் ரெய்டு நடத்தி வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றனர். பெண்கள் நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது வீட்டிற்குள் நுழைந்தால் என்ன செய்வார்கள்?தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி மாநில அரசின் திட்ட விளம்பர பலகைகளில் உள்ள எனது புகைப்படத்தை மறைத்துள்ளீர்கள். ஆனால் ஒன்றிய அரசின் திட்ட விளம்பர பலகைகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மட்டும் மறைக்கவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

* பேரணி நடத்துங்கள் கலவரம் செய்யாதீங்க

மம்தா பேசுகையில், ‘‘வரும் 19ம் தேதி வாக்குப்பதிவுக்கு முன்பாக வரும் 17ம் தேதி ராம நவமி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பாஜ வகுப்புவாத உணர்ச்சிகளை தூண்டிவிடும். எனவே யாரும் எந்த அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபட வேண்டாம். பாஜவினரை கேட்டுக் கொள்கிறேன். பேரணி நடத்துங்கள், கலவரத்தை நடத்தாதீர்கள். கலவரத்தை தூண்டுமாறு ராமர் உங்களை கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அதை செய்துவிட்டு, பின்னர் என்ஐஏவை கொண்டு வருவார்கள்’’ என்றார்.