Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரிய அளவில் பாதிப்பில்லை; ஒரு சிலருக்கு மட்டுமே நீட் வினாத்தாள் கசிந்தது: உச்ச நீதிமன்றத்தில் என்டிஏ பிரமாண பத்திரம் தாக்கல்

புதுடெல்லி: நீட் முறைகேடு தொடர்பான கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முறைகேடு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வினாத்தாள் கசிவு தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில்,’ பாட்னாவில் நடந்ததாகக் கூறப்படும் வினாத்தாள் கசிவு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் வினாத்தாள்களின் நகலை ரகசியமாக எடுத்துச் சென்றுள்ளனர்.அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட நகல்கள் தவறான வழிகளில் முறைகேடுகளுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.ஆனால் இது போன்ற முறைகேடுகள் வழியாக பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. மேலும் நீட் வினாத்தாள் கசிவு ஒட்டுமொத்த இயந்திரத்தின் அல்ல. அது ஒரு தனிப்பட்ட சம்பவம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 61 மாணவர்கள் முழு மதிப்பெண்களைப் பெறுவதில் மிக முக்கியமான காரணம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது தான். 2023ல் 20,38,596 ஆக இருந்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, 2024ல் 23,33,297 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 2019-20 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட சவால்கள் காரணமாக நீட்தேர்வு பாட சுமை 22-25 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடினமாக மற்றும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பகுதிகளான வேதியியலின் பி பிளாக் மற்றும் உயிரியலின் கருத்தியல் அத்தியாயங்கள் கடந்த ஆண்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்தக் பாடத் திட்ட குறைப்பு மாணவர்களின் படிப்புச் சுமையைக் கணிசமாகக் குறைத்தது. இதனால், பலர் முழு மதிப்பெண் பெற்றனர். நீட் முறைகேடு விவகாரத்தில் விரிவான விசாரணை மத்திய அமைப்புகளால் செய்யப்பட்டு வருகிறது. அதன் பிறகுதான் ஒட்டுமொத்த அமைப்பும் தவறிழைத்துள்ளதா என்பதைக் கூற முடியும். இதில் நீட் தேர்வு ரத்து செய்வது என்பது தவறிழைக்காத லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அநீதி இழைப்பது போன்றதாகும்.

தேசிய தேர்வு முகமையின் அலுவலகத்தில் அமர்ந்து தான் நீட் தேர்வுக்கான வினாத் தாள்களுக்கான கேள்விகளை நிபுணர்கள் தயாரிப்பாளர்கள். அவர்கள் தேர்வு செய்யும் கேள்விகள் எவை எவை இறுதி வினாத்தாளில் இடம்பெற்றுள்ளது என்பது அவர்களுக்கே தெரியாது. தேசிய தேர்வு முகமையின் சில அதிகாரிகளுக்கு மட்டுமே வினாத்தாள்களை கையாளும் அனுமதி உண்டு. அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில அச்சகங்களில் மட்டுமே வினா தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன.மேலும் அச்சடிக்கப்படும் வினாத்தாள்கள், சீலிடப்பட்ட பெட்டிகளில் வைத்து பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். மத்திய பொறுப்பாளர் மற்றும் என்.டி.ஏ மேற்பார்வையாளரால் கையாளப்படும். பின்னர் மேற்பார்வையாளரால் அந்தந்த மையங்களுக்கு அருகே அமைக்கபட்டுள்ள கட்டுப்பட்டு அறைகளுக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்படும். தேர்வுக்கு 45 நிமிடங்களுக்கு முன்னர்தான் தேர்வு மையங்களுக்கு என்.டி.ஏ அதிகாரியால் வழங்கப்படும்.

இதில் 2024 ம் ஆண்டு நீட் மருத்துவ இளங்கலை நுழைவுத்தேர்வில் 63 முறைகேடு புகார்கள் தேசிய தேர்வு முகமையில் பதிவாகியுள்ளது. புகார்கள் மீது நடைபெற்ற விசாரணையில், 33 மாணவர்களின் முடிவுகளை நிறுத்திவைக்கவும், 22 மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கவும், ஒன்பது மாணவர்களின் முடிவுகளை வெளியிடவும் என்.டி. ஏ விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது. பல்வேறு மையங்களில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக 13 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.