மழைக்கால கூட்டத்தொடருக்கு பின் 19 தேசியவாத காங். எம்எல்ஏக்கள் சரத்பவார் அணிக்கு திரும்புவார்கள்: ரோகித் பவார் நம்பிக்கை
மும்பை: ஆளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 19 எம்எல்ஏக்கள் விரைவில் சரத்பவார் அணிக்கு திரும்புவார்கள் என்று ரோகித் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ்(எஸ்பி) கட்சியை சேர்ந்த ரோகித் பவார் கூறுகையில்,‘‘தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தபோதிலும் கட்சியின் நிறுவனர் சரத் பவார் மற்றும் பிற மூத்த தலைவர்களுக்கு எதிராக ஒருபோதும் தவறாக பேசாத பல தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு தங்களது தொகுதிகளுக்கான வளர்ச்சி நிதியை பெற வேண்டும். எனவே தான் கூட்டத்தொடர் முடியும் வரை அவர்கள் காத்திருப்பார்கள். எங்களுடனும் மற்றும் சரத் பவாருடனும் 18 முதல் 19 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர். மழைக்கால கூட்டத்தொடருக்கு பின்னர் அவர்கள் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார்கள்” என்றார். மகாராஷ்டிரா மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 27ம் தேதி தொடங்கி ஜூலை 12ம் தேதி நிறைவடைகின்றது. அக்டோபரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக நடக்கும் கடைசி கூட்டத் தொடர் இதுவாகும்.