புதுடெல்லி: ‘நடுத்தர வர்க்கத்தினரினர் சம்பளம் உயரவில்லை. சேமிக்க பணமில்லை. இதனால் பெரும்பாலான இந்திய குடும்பங்கள் கடனிலேயே வாழ்கின்றன’ என ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய பொருளாதாரம் குறித்து ப்ளூம் வென்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஆண்டறிக்கையை வெளியிட்டது.
அதில், இந்தியாவில் உள்ள 140 கோடி இந்தியர்களில் 90 சதவீதமான 100 கோடி பேர் அவர்களின் விருப்பம் போல் செலவழிக்க பணமில்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு இந்தியா மீள்வது கடன்களால் செய்யப்படும் நுகர்வு வளர்ச்சியை அடிப்படையாக கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய விஷயமாகும். கொரோனாவுக்கு பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குடும்பங்களின் கடன்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு 43 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதனால் குடும்பங்களின் சேமிப்பு கணிசமாக குறைந்து விட்டது. 2000ம் நிதியாண்டில் மொத்த சேமிப்பில் 84 சதவீதமாக இருந்த குடும்பங்களின் பங்கு 2023ம் நிதியாண்டில் 61 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த 10 ஆண்டாக நடுத்தர வர்க்கத்தினரின் சம்பளத்தில் மிகப்பெரிய தேக்க நிலை நிலவுகிறது. யாருடைய சம்பளமும் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. இதனால் 100 கோடி பேர் அத்தியவாசிய பொருட்களை தவிர வேறெதையும் வாங்க பணம் இல்லாத நிலையில் உள்ளனர்.
அதோடு நாட்டில் சமத்துவமின்மை உச்சத்தில் உள்ளது. நாட்டின் மொத்த வருமானத்தில் 57.7 சதவீதம் 10 சதவீத பணக்காரர்களிடம் உள்ளது. இதுவே மக்கள்தொகையில் 50 சதவீதம் பேராக உள்ள ஏழைகளின் வருவாய் தேசிய வருவாயில் 22.2 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக சரிந்துள்ளது. எனவே பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள் இன்னும் ஏழைகளாகிக் கொண்டுள்ளனர். இதுபோன்ற நெருக்கடிகளை கவனிப்பதில் தோல்வி அடைந்துள்ள ஒன்றிய அரசு, பட்ஜெட்டில் ஏமாற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
* சாமானியர்கள் பாக்கெட் காலி
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘பிரதமரின் வளர்ந்த இந்தியா தொலைநோக்கு பார்வை சாமானியர்களின் பாக்கெட்டை காலி செய்து, குறிப்பிட்ட சில கோடீஸ்வரர்களின் கஜானாவை நிரப்புகிறது’’ என விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, ‘‘பாஜ ஆட்சியில் நிலவும் பொருளாதார அநீதி நாட்டின் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சாபக்கேடாக மாறியுள்ளது’’ என்று கூறி உள்ளார்.