மோடி கடவுள் தூதரா என விரைவில் தெரியும்; ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: லாலு பிரசாத் யாதவ் உறுதி
பாட்னா: பிரதமர் மோடி அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், “நான் மனிதப்பிறவியே அல்ல. கடவுளால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவன். இந்த பூமியில் சில செயல்களை கடவுள் என் மூலம் செய்ய விரும்புகிறார். அதற்காக கடவுள் கொடுத்த சக்தியால்தான் நான் சோர்வடையாமல் பணி செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தன் டிவிட்டர் பதிவில், “இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரை இழிவுப்படுத்தும் பாஜ தலைவர்கள் இடஒதுக்கீட்டை ஒழிப்பது பற்றி பேசுகிறார்கள்.
அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதியதால்தான் மோடியும், பாஜவினரும் அரசியலமைப்பை வெறுக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த லாலு பிரசாத் யாதவ், “பிரதமர் மோடி தான் கடவுளின் தூதர் என்று தன்னை சொல்லி கொள்கிறார். அவர் கடவுளின் தூதரா என்பது விரைவில் தெரிந்து விடும். ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.