புதுடெல்லி: திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் (19) என்பவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். கடந்த 7ம் தேதி முதல் அவரைக் காணவில்லை என்று மெஹ்ரோலி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அடங்கிய இரண்டு மாவட்டக் குழுவினர் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். விசாரணையில், சினேகா காணாமல் போவதற்கு முன்பு, ‘நான் மன உளைச்சலில் இருக்கிறேன்’ என்று ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர் கடைசியாக டெல்லியின் புகழ்பெற்ற சிக்னேச்சர் பாலத்தில் காணப்பட்டதாக டிரைவர் ஒருவர் உறுதிப்படுத்தினார். இதையடுத்து, தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் யமுனை ஆற்றில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
ஆனால், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் எதுவும் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், பல நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, கீதா காலனி மேம்பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட சடலம் சினேகாவுடையதுதான் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் அடையாளம் காட்டியுள்ளனர். காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சினேகா மன உளைச்சல் காரணமாகப் பாலத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும், அவரது மன உளைச்சலுக்கான உண்மையான காரணம் என்ன என்பது மர்மமாகவே உள்ளது. டெல்லி பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்கப்பட்ட இந்தச் சம்பவம், சக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.