ஆரம்பக் கல்வி முதலே இந்தியைத் திணிக்க வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு படு தீவிரம் காட்டி வருகிறது. மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் நிர்ப்பந்தித்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு முயற்சி சிறிது கூட எடுபடவில்லை. இவ்வளவு ஏன்… பாஜ கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் கூட மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முடியாமல் போய் விட்டது. மராத்தி மொழி உணர்வு கிளர்ந்து விட்டு எழுந்ததால், இந்தித் திணிப்பு அரசாணைகளை ரத்து செய்யும் நிலைக்கு பட்நவிஸ் தலைமையிலான பாஜ கூட்டணி அரசு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், இந்தி ஆட்சி மொழியாக உள்ள மத்திய பிரதேசத்திலேயே, இந்தி மொழி வழி மருத்துவக் கல்விக்கு வரவேற்பு இல்லாமல் போனது, பாஜ அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழி வழி மருத்துவக் கல்வியை 2022 அக்டோபர் 12ம் தேதி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
ஏறக்குறைய மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இந்தி வழி மருத்துவக் கல்விக்கு எந்த வரவேற்பும் இல்லாதது அம்பலம் ஆகியுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் வெளிவந்த புள்ளி விவரத்தின்படி, அந்த மாநிலத்தில் ஒரு மாணவர் கூட எம்பிபிஎஸ் தேர்வை இந்தி மொழியில் எழுதவில்லை என தெரிய வந்துள்ளது.
இந்தி வழி மருத்துவக் கல்விக்காக மத்தியப் பிரதேச அரசு சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது. பள்ளிப் பருவத்தில் இருந்தே இந்தி வழியில் படித்த மாணாக்கர்கள் மருத்துவப் படிப்பை தொடர்ந்து படிக்க இடையூறு இல்லாத வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், ஒரு மாணவர் கூட இந்த திட்டத்தை ஏற்கவில்லை என்பது மேற்கண்ட தகவல் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.
இது குறித்து போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் அருணா குமார் கூறுகையில், ‘‘இந்தி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கற்பித்தல் முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழவில்லை. வகுப்புகளில் விரிவுரையாளர்கள் பாடம் நடத்தும்போது இந்தியில் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில், புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையும் துவங்க இருக்கிறது’’, என்றார்.
மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் கூறுகையில், ‘‘மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இந்தி மொழிப் பாடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ் இந்தி வழியில் கற்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. எனினும், கடந்த மூன்றாண்டுகளில் ஒரு மாணவர் கூட இந்தியில் தேர்வு எழுதவில்லை’’, என்றார். இந்தி மொழி வழிக் கல்வியிலும் இந்தித் திணிப்பிலும் தீவிரம் காட்டி வரும் ஒன்றிய அரசுக்கு, இந்தி ஆட்சி மொழியாக உள்ள மத்தியப் பிரேதசத்திலேயே இந்தி வழி மருத்துவப் படிப்புக்கு வரவேற்பு இல்லாதது கடும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்கின்றனர் கல்வியாளர்கள்.
இந்தி புத்தகத்தில் ஆங்கில பதங்கள்
இந்தி வழி மருத்துவப்படிப்பு குறித்து மத்திய பிரதேச மாணவர்கள் சிலர் கூறுகையில், ‘‘பாடப்புத்தகங்கள் இந்தி மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வாங்கிப் பார்க்கும்போது, பெரும்பாலான மருத்துவப் பதங்கள் ஆங்கிலத்தில் தான் இருந்தன. இந்தி மொழியில் இல்லை, என்றனர்.
இந்தி வழியில் மருத்துவக் கல்வி வழங்கும் மாநிலங்கள்
- நாட்டிலேயே முதல் முறையாக இந்தி வழியில் மருத்துவப் படிப்பு, 2022 அக்டோபர் மாதம் மத்திய பிரதேசத்தில் அறிமுகம் ஆனது.
- உத்தரபிரதேசம்: மத்திய பிரதேசத்தை தொடர்ந்து உத்தர பிரதேசத்திலும் இந்தி வழி மருத்துவ கல்வி அளிப்பதாக அறிவித்தது.
- உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த வழிக் கல்வியை விருப்பத் தேர்வாக அறிவித்தது.
- பீகார்: எம்பிபிஎஸ் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும் என பீகார் அரசு கடந்த ஆண்டு 2024ம் ஆண்டு அறிவித்தது.
- சட்டீஸ்கர்: 2024-25 கல்வியாண்டு முதல் இந்தி வழியில் எம்பிபிஎஸ் கற்பிக்கப்படும் என சட்டீஸ்கர் அரசு கடந்தாண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது.
- ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் 2024-25 கல்வியாண்டில் 2 கல்லூரிகளில் மட்டும் இந்தி வழி மருத்துவக் கல்வி கற்பிப்பதாக அறிவித்தது.
இந்தி இன்ஜி. படிப்பும் அம்பேல்
மருத்துவப் படிப்பைப் போல் இந்தி மொழியில் இன்ஜினியரிங் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அதுவும் படு தோல்வியில் முடிந்தது. கடந்த 2022-23 கல்வியாண்டில் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 1,200 பேர் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தனர். இவர்களில் 150 பேர் இந்தி வழிக் கல்வியைத் தேர்ந்தெடுத்தனர். 4 ஆண்டு படிப்பு முடிவில் பலர் பாதியிலேயே வெளியேறி விட்டனர். 4ம் ஆண்டில் வெறும் 27 மாணவர்களே மிஞ்சினர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னோடியாகத் திகழ்ந்த தமிழ்நாடு
- உயர் கல்விப் படிப்புகளை தாய் மொழியில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் 2010ம் ஆண்டிலேயே அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் தமிழில் கற்பிக்கப்படும் என அறிவித்தார். இந்தத் திட்டம் மூலம் பல லட்சம் மாணவர்கள் பலன் பெற்றிருக்கின்றனர்.
- தேசிய மருத்துவ கமிஷன் இளநிலை மருத்துவப் படிப்புகளை தாய் மொழி வழியில் கற்பிக்க 2024ம் ஆண்டு தான் அனுமதி வழங்கியது. உடனேயே, தமிழ் வழியில் மருத்துவக் கல்வி கற்பிக்கப்படும் என டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்தது.
- மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான பாடப்புத்தகங்களை தமிழில் மொழிப் பெயர்க்கும் பணிகள் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டன. முதலாண்டு மாணவர்களுக்கான 5 புத்தகங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டில் மொழி பெயர்க்கப்பட்டன.
- இந்த பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற் கொண்டு வருகிறது. 13 கோடி எம்பிபிஎஸ் பாடத்திட்ட புத்தகங்களை மொழி பெயர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.