ரேபரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் தனது சகோதரர் ராகுல்காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார். சவுடா மில் ரவுண்டானா பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ‘‘அயோத்தியில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பை நிராகரித்ததற்காக எங்களை மதத்திற்கு எதிரானவர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
இறப்பதற்கு முன் ‘ஹே ராம்’ என்று கோஷமிட்ட மகாத்மா காந்தியின் கொள்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். பாஜ தங்களை இந்து மதத்தின் சாம்பியன் என்று கூறிக்கொண்டாலும், உத்தரப்பிரதேசத்தில் அரசு நடத்தும் கோசாலைகளின் நிலை பரிதாபமாக உள்ளது. அங்கு நாய்கள் இறந்த பசுவின் இறைச்சியை சாப்பிடுவதை காண முடிகிறது. இந்திராகாந்தி மற்றும் ராஜீவ்காந்தி காலத்தில் இருந்தே காந்தி குடும்பத்துக்கும் ரேபரேலிக்கும் வலுவான பிணைப்பு உள்ளது. ராகுல்காந்தி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பாரம்பரியத்தை பின்பற்றுவார்”என்றார்.