வரம்புகளை பின்பற்றவில்லை என்றால் ஈஷா யோகா மையத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: கோவை ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் பூர்ணிமா கிருஷ்ணா “சுமார் 1.25 லட்சம் சதுர மீட்டர் அளவில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.
ஈஷா யோகா மையம் கல்வி நிறுவனம் அல்ல. எனவே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் வழங்கப்பட்ட நோட்டீஸ் மீது நடவடிக்கை மேற்கொள்ள எங்களுக்கு அனுமதிக்க வேண்டும். அதேப்போன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை சிவராத்திரி விழா விடுமுறைக்கு பிறகு பட்டியலிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், “ பசுமைப் பகுதி குறைவாக இருக்கிறது அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை என்றால் அதை சரி செய்ய பாருங்கள். உங்கள் கண் முன்பாகவே கட்டி எழுப்பப்பட்ட கட்டிடத்தை திடீரென நீங்கள் இடிக்க கேட்பதால் அதை அனுமதிக்க முடியாது. மேலும் ஈஷா யோகா மையம் கல்வி நிலையம் இல்லை என்று கூறுவதையும் ஏற்க முடியாது.
இருப்பினும் ஈஷா யோகா அதற்கான வரம்புகளை அவர்கள் சரிவர பின்பற்றவில்லை என்றாலோ, அல்லது சட்ட விதிகளை மீரி செயல்பட்டாலோ தமிழ்நாடு அரசு தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு எந்தவித நிபந்தனைகளும் கிடையாது என்று நீதிபதிகள்,வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.