வரி விதிப்பு, நாடு கடத்தல் குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்ப வேண்டும்: பிரதமர் மோடிக்கு கார்கே வலியுறுத்தல்
புதுடெல்லி: அமெரிக்க அதிபரிடம், வரி மற்றும் நாடு கடத்தல் தொடர்பான பிரச்னையை பிரதமர் மோடி எழுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தி இருக்கிறார். பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கும்போது அனைத்து இந்தியர்களுக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தும் வரிவிதிப்பு, இந்தியர்கள் நாடு கடத்தல் பிரச்னையை பிரதமர் மோடி எழுப்ப வேண்டும்.
வரிகள் எந்த நாட்டிற்கும் விதிவிலக்குகள் இல்லை என்று கூறி அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகளுக்கு 25சதவீத வரி விதிப்பது இந்தியாவின் உற்பத்திக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். கைவிலங்கிட்டு, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இந்தியர்களை நாடு கடத்தியது அனைத்து இந்தியர்களிடையே வலுவான கவலையை எழுப்பி உள்ளது. எந்த ஒரு இந்திய குடிமகனும் அவமானப்படுத்தப்படக்கூடாது, கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.