அரக்கோணம்: காஷ்மீருக்கு ஆன்மீக பயணம் சென்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கி அரக்கோணத்தை சேர்ந்த மாஜி ரயில்வே ஊழியர் பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் குப்பன்(70), ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி ராதா(66). ஒரு மகன், 2 மகள் உள்ளனர். கடந்த வாரம் குப்பன் மனைவியுடன் வடமாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றார். நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம், ரியாத்தி பகுதியில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்றபோது கத்ரா பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆன்மிக யாத்திரை தொடங்கும் இடமான குல்சன் காலங்கரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், குப்பன், ராதா உட்பட 10 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் குப்பன் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி ராதா, மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.