Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது கர்நாடக அரசு ஐடி நிறுவனங்களில் 14 மணி நேரம் பணி: ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு ஐடி ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்தி சட்டத்திருத்தம் மேற்கொள்ள திட்டமிடும் நிலையில், ஐடி ஊழியர்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஐடி நகரமாக பெங்களூரு திகழ்கிறது. மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் பெங்களூருவில் தான் உள்ளன. கர்நாடகாவில் ஐடி நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழில் நிறுவனங்களிலும் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ் அரசு திட்டமிட்டிருந்தது.

கர்நாடகாவில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் நிர்வாகப்பணியில் 50%, நிர்வாகமல்லாத பணிகளில் 75% மற்றும் சி, டி பிரிவு பணிகளில் 100% கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்து அமல்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் திறமை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கும் ஐடி நிறுவனங்கள் இந்த இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாநில அரசு இந்த முடிவிலிருந்து பின் வாங்கியது. அந்த மசோதாவை தாக்கல் செய்யும் திட்டத்தையும் கைவிட்டது.

ஆனால், அதை கைவிட்ட கர்நாடக அரசு, ஐடி ஊழியர்களின் வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்தி சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் முயற்சியை கையிலெடுத்துள்ளது. கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961-ல், ஐடி ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தொழிலாளர் நலத்துறை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கம் அந்த கூட்டத்திலேயே எதிர்ப்பை பதிவு செய்தது. இது மனிதத்தன்மையற்ற செயல் என்று மிகக்கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது.

இதுதொடர்பாக ஐடி ஊழியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே ஐடி ஊழியர்கள் பணிச்சுமை, கூடுதல் நேரம் வேலை செய்வதால் மன அழுத்தம் மற்றும் உடல்நல பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். 9 மணி நேரம் வேலை எனும்போதே அதைவிட கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. வேலை நேரத்தை 14 மணி நேரமாக அதிகரித்தால், அதைவிட அதிக நேரம் வேலை செய்ய வேண்டிவரும் என்பதால் அது ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் கர்நாடகாவில் ஐடி துறையில் பணியாற்றும் 20 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது ஐடி-யில் 3 ஷிப்ட்டுகளாக ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

ஐடி ஊழியர்களின் பணி நேரத்தை அதிகப்படுத்தினால் ஷிப்ட் இரண்டாக குறையும். எனவே பலர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே இந்த சட்டத்திருத்தத்தை உடனே மாநில அரசு திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் 20 லட்சம் ஐடி ஊழியர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐடி ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடக அரசு முயற்சிப்பது போல், ஒரு நாளைக்கு 14 மணி நேரம் பணி நேரம் என்றால், ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் ஆகும். இப்போது ஒரு வாரத்திற்கான பணி நேரம் சட்டப்படி 45 மணி நேரமாக இருக்கிறது. அதை 70 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டிருக்கிறது. அண்மையில், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், கர்நாடக அரசு இந்த முயற்சியை முன்னெடுத்தது. ஆனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் அரசின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.