புதுடெல்லி: ஓய்வுக்கு பின் சட்டப் பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர்களாக சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிகள் இருவர் இணைந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள், தங்களது பணி ஓய்வுக்குப் பிறகு நாட்டின் புகழ்பெற்ற சட்டப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகப் பொறுப்பேற்பது என்பது புதிய தொடக்கமாக மாறியுள்ளது. அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தின் 50வது முன்னாள் தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், கடந்த மே மாதம் டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ‘சிறப்புப் பேராசிரியராக’ பணியில் இணைந்தார். சட்டத் துறையில் அவரது ஆழ்ந்த அனுபவத்தையும் அறிவையும் மாணவர்களுக்கு வழங்கும் இந்த முடிவு, சட்டத்துறை வட்டாரங்களில் பெரும் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது.
அவரைத் தொடர்ந்து, தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தின் 51வது முன்னாள் தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவும், சிறப்பு பேராசிரியராக சிம்லாவில் உள்ள இமாச்சலப் பிரதேச தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் பல்கலைக்கழகம் விடுத்த அழைப்பை ஏற்று, கடந்த 12ம் தேதி அவர் தனது ஒப்புதல் கடிதத்தை அனுப்பியுள்ளார். இதை அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பிரீத்தி சக்சேனா உறுதிப்படுத்தியுள்ளார். இவர் சட்டத் துறையில் ஆற்றிய பங்களிப்புகளுக்காகப் பெரிதும் மதிக்கப்படுபவர். உச்சபட்ச பதவிகளை வகித்த இதுபோன்ற சிறந்த சட்ட மேதைகள், தங்களின் அனுபவத்தை அடுத்த தலைமுறை மாணவர்களுடன் நேரடியாகப் பகிர்ந்துகொள்வது, இந்திய சட்டக் கல்விக்குக் கிடைத்த பெரும் பலமாகவும் உத்வேகமாகவும் பார்க்கப்படுகிறது.


