ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தர வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தலைமையில் நேற்று ஸ்ரீநகரில் பேரணி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக கர்ரா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஜம்முவின் ஷாஹீதி சவுக்கில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று திரண்டனர்.
ஹமாரி ரியாசத் ஹமாரா ஹக் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, கோரிக்கையை வலியுறுத்தும் கடிதத்தை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் அளிக்க ராஜ் பவனுக்கு பேரணி செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து பேரணி செல்ல முயன்ற கர்ரா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தாரிக் ஹமீத் கர்ரா கூறுகையில், “காவல்துறையின் அடக்குமுறைகளால காங்கிரஸ் அடிபணியாது. மாறாக நமது உரிமைகளுக்காக போராடுவதற்கான உறுதியை இது மேலும் வலுப்படுத்தும்” என்றார்.