Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐபிஎல் வெற்றி விழாவில் 11 ரசிகர்கள் பலி ஆர்சிபி மீது நடவடிக்கை அவசியம்: போலீசாரின் அலட்சியமும் காரணம், விசாரணை அறிக்கையில் நீதிபதி குன்ஹா தகவல்

பெங்களூரு: 18வது ஐபிஎல் இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த வெற்றி விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்துள்ள வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசுசார்பில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா விசாரணை நடத்தி நேற்று முன்தினம் முதல்வர் சித்தராமையாவிடம் ஆய்வு அறிக்கையை வழங்கினார். அதில் போலீசார் மெத்தனமாக செயல்பட்டதும், சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் கழித்து மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் கொடுத்ததின் மூலம் மெத்தனமாக இருந்ததை அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளதாக தெரியவருகிறது. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தின் நுழைவு வாயில்கள் சிறியதாக உள்ளது. தீயணைப்பு பாதுகாப்பு வசதியுமில்லை.

1,650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்று சொல்வது முற்றிலும் பொய், 800க்கும் குறைவான போலீசார் மட்டுமே வெளியில் இருந்துள்ளனர். வெற்றி விழா நடத்துவதற்கான சரியான நேரம் இல்லை என்பது தெரிந்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கர்நாடக கிரிக்கெட் சங்கம், டிஎன்ஏ நிறுவனம் ஆகியவை விழா ஏற்பாடு செய்ததன் மூலம் பெரியளவில் தவறு செய்துள்ளனர்.

அந்த அமைப்பினர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கர்நாடக கிரிக்கெட் டிஎன்ஏ நிறுவனம் ஆகியவை நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். ஒரே சமயத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மாநகருக்குள் வந்ததால், போலீசாரும் பாதுகாப்பு கொடுப்பதில் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட வேண்டும் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உரிமையாளர்கள் வலியுறுத்தி இருந்தாலும், சின்னசாமி விளையாட்டு மைதானத்தின் தன்மையை கருத்தில் கொண்டு கர்நாடக கிரிக்கெட் சங்கம், தாமதப்படுத்தி நடத்தலாம் என்ற யோசனை தெரிவித்திருக்க வேண்டும். ஆர்சிபி நிறுவனமும் அவசர கோலத்தில் வெற்றி விழாவை முன்னேற்பாடு இல்லாமல் நடத்தியதும் சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

* ஸ்டேடியத்திற்கு உள்ளே 79 போலீசாரே இருந்தனர்

சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்குள் 79 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். மைதானத்தின் வெளியிலும் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. அவசர வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் செய்யாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

பகல் 3.25 மணிக்கு உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் மாலை 5.30 மணி வரை மாநகர போலீஸ் கமிஷனர் கவனத்திற்கு தெரியவில்லை. மாலை 4 மணிக்கு இணை போலீஸ் கமிஷனர் விளையாட்டு மைதானத்திற்கு வந்துள்ளார். மேலும் சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் விழா ஏற்பாடு செய்தது சரியல்ல