போலீசாருக்கு தகவல் கொடுப்பதாக சந்தேகம்; அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவரை கொன்ற நக்சல்கள்: சட்டீஸ்கரில் பயங்கரம்
பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இரண்டு பேர் போலீசாருக்கு ரகசியமாக நக்சல்கள் குறித்த தகவல்களை கொடுப்பதாக நக்சல்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து நக்சல்கள் சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்களையும் கொலை செய்துள்ளனர்.
முதல்கட்ட தகவலின்படி பர்சேகரில் உள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்த வினோத் மேட்(28) கோடபாட்கு கிராம பள்ளியில் ஆசிரியராக இருந்தார். டெக்கமேடா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மெட்டா உள்ளூர் பள்ளியிலேயே பணியாற்றினார். இவர்களை வெவ்வேறு இடங்களில் நக்சல்கள் கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு போலீசார் விரைந்துள்ளனர். இருவரது சடலங்களையும் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை இருவரின் சடலங்களும் மீட்கப்படவில்லை.