புதுடெல்லி: டெல்லியில் இருந்து கோவா நோக்கி நேற்று ஒரு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 191 பேர் பயணம் செய்தனர். விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனே விமானி, அவசரமாக மும்பையில் உள்ள விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விவரத்தை கூறினார். இதையடுத்து விமானம், மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து இண்டிகோ நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘தொழில்நுட்ப கோளாறால் விமானம் இரவு 9.52 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். தொடர்ந்து மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.