இந்திய கிரிக்கெட் அணி வெற்றி ஊர்வலம்; மபியில் பயங்கர கலவரம் கார்கள், டூவீலர் எரிப்பு: பதற்றம்- போலீஸ் குவிப்பு
மவ்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து மபி,இந்தூர் அருகில் உள்ள மவ் நகரில் ரசிகர்கள் ஊர்வலம் மேற்கொண்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அங்கு நிலைமையை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இந்தூர் கலெக்டர் ஆஷிஷ் சிங்,‘‘ மொத்தம் 5 இடங்களில் மோதல்கள் நடந்தன. 2 கார்கள், ஏராளமான டூவீலர்கள் எரிக்கப்பட்டன.கலவரம்,வன்முறையில் ஈடுபட்டதாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமை தற்போது கட்டுக்குள் இருக்கிறது’’ என்றார்.