மியான்மர் எல்லையில் பதற்றம்; ‘உல்ஃபா’ முகாம் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?.. தீவிரவாத அமைப்பு அலறல்
புதுடெல்லி: மியான்மர் எல்லையில் இருக்கும் ‘உல்ஃபா’ தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறியதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. இந்தியாவிலிருந்து அசாமைப் பிரித்து, ‘தனி இறையாண்மை கொண்ட அசாம்’ என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 1979ம் ஆண்டு பரேஷ் பருவா, அரவிந்த ராசுகோவா உள்ளிட்ட ஏழு இளைஞர்களால் ‘அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி’ என்ற ‘உல்ஃபா’ அமைப்பு தொடங்கப்பட்டது. அசாமின் இயற்கை வளங்களை ஒன்றிய அரசு சுரண்டுவதாகவும், அதன் கலாசாரத்தை அழிப்பதாகவும் குற்றம்சாட்டி, இந்த அமைப்பு ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தது. ஆனால், 1990ம் ஆண்டில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் பஜ்ரங்’ என்ற பெயரில் பெரிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய பிறகு, ‘உல்ஃபா’ அமைப்பு படிப்படியாக பலவீனமடைந்தது.
காலப்போக்கில் அப்பாவி மக்களைக் கொன்றதால் பொதுமக்களின் ஆதரவையும் இழந்த இந்த அமைப்பு, இரண்டாகப் பிளவுபட்டது. இதில் ஒரு பிரிவு, ஒன்றிய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றொரு பிரிவான ‘உல்ஃபா (சுயேட்சை)’ என்ற அமைப்பின் தளபதி பரேஷ் பருவா தலைமையானது, இன்னும் ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடி வருகிறது. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்த அமைப்பில், தற்போது 100 முதல் 150 தீவிரவாதிகளே இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தீவிரவாதக் குழு, மியான்மர்-சீனா எல்லையில் பதுங்கியிருந்து செயல்படுவதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், மியான்மர் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு திடீர் தாக்குதல் நடத்தியதாக உல்ஃபா (சுயேட்சை) அமைப்பு நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறுகையில், ‘இதுபோன்ற ராணுவ நடவடிக்கை குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை’ என்றார். ஆனால் உல்ஃபாவின் இந்தக் குற்றச்சாட்டும், இந்திய ராணுவத்தின் மறுப்பும் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.