Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை செயலிழக்கிறது வெயிலில் மயங்கி விழுபவர்களின் உயிரை காக்க சிகிச்சை அவசியம்

*சித்தூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி அறிவுறுத்தல்

சித்தூர் : வெயிலில் உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை செயலிழந்து மயங்கி விழுவர்களின் உயிரை காக்க சிகிச்சை அவசியம் என சித்தூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.ஆந்திராவில் கோடை வெயிலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கோடை வெயிலில் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். வெயிலில் யாராவது மயங்கி விழுந்தால் உரிய சிகிச்சை அளிப்பது அவசியம் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி பிரபாவதி கூறியதாவது:

தற்போது மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு கிராமமாக சென்று பொதுமக்களிடையே சுட்டெரிக்கும் வெயிலால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறோம். கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் விவசாய நிலங்களில் வேலை செய்ய செல்லும்போது காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை பணிபுரிந்து வீட்டுக்கு வந்து விட வேண்டும். அதற்கு மேல் வெயிலில் வேலை செய்யக்கூடாது. மாலை 4 மணிக்கு மேல் விவசாயிகள் வேலை செய்து கொள்ளலாம்.

மேலும் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் ஏராளமான பொதுமக்கள் சோர்வடைந்து கீழே மயங்கி விழுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மூளை செயலிழந்து விடுகிறது. உடலில் உஷ்ணம் அதிகரித்து விடுகிறது. இதனால் மயங்கி விழும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற அறிகுறிகள் ஏதாவது தெரியவந்தால் உடனடியாக அவர்கள் நிழலில் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும். உடல் முழுவதும் குளிர்ந்த நீரால் துடைக்க வேண்டும் தண்ணீர் அதிகளவு பருக வேண்டும். உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வெயிலில் இருந்து உயிரை காப்பாற்ற முடியும்.

அதேபோல் பொதுமக்கள் அனைவரும் இளநீர், குளிர்பானம், மோர், எலுமிச்சை ரசம் உள்ளிட்டவற்றை அதிகளவு பருக வேண்டும். அதிகமாக பழரச வகைகளை குடிக்க வேண்டும். இன்று முதல் மேலும் ஐந்து நாட்களுக்குவெப்பம் அதிகரிக்க கூடும் என மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாள்தோறும் 10 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு சாப்பிடும்போது சிறிதளவு உப்பு கூடுதலாக சேர்த்துக்கொண்டு சாப்பிட வேண்டும்.

மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு பொதுமக்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொண்டு பருக வேண்டும். அப்போதுதான் இந்த வெயில் தாக்கத்திலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். அதேபோல் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது கோடை விடுமுறை விடப்பட்டதால் குழந்தைகள் தெருக்களில் விளையாடச் சென்று விடுகிறார்கள். இதனால் பாதிப்பு ஏற்படும். எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் இருக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். அனைவரும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.