ஸ்ரீநகர்: தியாகிகள் தினத்தையொட்டி காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் கடந்த 1931ம் ஆண்டு ஜூலை 13ல் மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடந்தது. அப்போது டோக்ரா ராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 13ம் தேதி தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அப்போது அரசியல் கட்சி பிரமுகர்கள் ராணுவம் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்களின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள். இந்த நிலையில், நேற்று பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதுகுறித்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கை என்றார்.