கனமழையின் போது தரை இறங்கியதால் விபத்து; மும்பை ஏர்போர்ட் ஓடுபாதையில் சறுக்கிய விமானம்: பயணிகள் தப்பினர்
மும்பை: மும்பையில் கனமழை காரணமாக விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகியது. அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்ட வசமாகத் தப்பினர். நேற்று கொச்சியில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. ஓடுதளம் மழை காரணமாக ஈரமாக இருந்தது.
அதில் விமானம் இறங்கிய பிறகு திடீரென சறுக்கிக் கொண்டு தாறுமாறாகச் சென்று, ஓடு பாதையில் இருந்து விலகி, புல்வெளியில் பாய்ந்தது. இதில், விமானத்தின் 3 டயர்கள் வெடித்தன. விமானத்தின் இன்ஜின் பகுதி, ஓடுபாதையில் இருந்த 3 அறிவிப்புப் பலகைகள், ஓடுபாதை ஓரங்களில் உள்ள 4 விளக்குகளும் சேதம் அடைந்தன. எந்த ஆபத்தும் ஏற்படாமல் விமான பயணிகள் தப்பினர்.