அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வதோதரா ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் விதமாக கட்டப்பட்டிருந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா பாலம் கடந்த 9ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகினர். இதேபோல் நேற்று முன்தினம் ஜூனகத் மாவட்டம் மங்க்ரோல் நகரத்துக்கு அருகே அன்ட்ரோல் மற்றும் கேஷோட் கிராமங்களை இணைக்கும் விதமாக கட்டப்பட்டிருந்த பாலத்தை இடிக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது சிலர் ஆற்றில் விழுந்தனர்.
இந்நிலையில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 5 பாலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 4 பாலங்களில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வௌியிடப்பட்ட அறிக்கையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகப்பெரிய நர்மதா நதியின் குறுக்கே அமைந்துள்ள பல்வேறு பாலங்களை மாநில அரசு ஆய்வு செய்து வருகிறது.
அதன்படி, மோர்பி மாவட்டத்தில் 2 பாலங்கள், சுரேந்திரநகர் மாவட்டத்தில் 3 பாலங்கள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டு, அவை மூடப்பட்டன. 4 பாலங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு பணிகளுக்காக 36 பாலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.