Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேவையான இடத்தில் செயல்படாமல் செய்யக் கூடாத விஷயத்தை செய்கிறார்கள் ஆளுநர்கள்: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா வேதனை

பெங்களூரு: பெங்களூருவில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் ‘இந்தியப் பெண்களின் அரசியலமைப்பு கற்பனைகள்’ என்ற தலைப்பில் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா பேசுகையில், ‘‘இன்றைய காலகட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் உள்ள சில ஆளுநர்கள் செய்யக்கூடாத விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் செயல்பட வேண்டிய இடத்தில் செயலற்றவர்களாக இருக்கிறார்கள். ஆளுநர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, சிறிய வட்டத்திற்குள் சிக்காமல் உயர்ந்த சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டுமே தவிர, கட்சி விவகாரங்களுக்கு உட்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என ஆளுநர்களின் நடுநிலை குறித்து வழக்கறிஞரும் சுதந்திர போராட்ட தியாகியுமான துர்காபாய் தேஷ்முக் கூறி இருப்பதை குறிப்பிட விரும்புகிறேன்’’ என்றார்.

கூட்டாட்சி தத்துவத்தை பற்றி பேசிய நீதிபதி நாகரத்னா, ‘‘மாநிலங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவைகளை உதாசீனப்படுத்தக் கூடாது. மாநிலங்களை திறனற்றதாகவோ, கீழ்படிந்ததாகவோ கருதக்கூடாது. அரசியல் சாசனத்தை நிலைநாட்டும் உணர்வே தாரக மந்திராக இருக்க வேண்டுமே தவிர, பாகுபாடான துவேஷம் அல்ல’’ என்றார். ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பல குடைச்சல் தரப்படுகிறது. இதுபோன்ற ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. இந்தசூழலில் ஆளுநர்களின் செயல்பாடு குறித்து நீதிபதி நாகரத்னா தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது குறித்து கடந்த மார்ச் மாதம் நீதிபதி நாகரத்னா கண்டனம் தெரிவித்து பேசியிருந்தார்.