Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்க நகைக்கடன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்க: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

புதுடெல்லி: தங்க நகைகள் மீது வங்கிகள் கடன் வழங்குவதற்கான விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்ய மக்களவையில் திமுக வலியுறுத்தியுள்ளது.

மக்களவையில் திமுக எம்.பி.க்கள் தங்க தமிழ்செல்வன் மற்றும் கணபதி ராஜ்குமார் எழுப்பிய கேள்வி:

தங்கப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் 2025 ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும், 2 லட்சம் வரையிலான விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக ஏற்றுக்கொள்வதை தொடர வேண்டும். மேலும் கடன் வழங்குவதற்கான விதிமுறைகளின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறும் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தச் சொல்லி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடித்தத்திற்கு ஒன்றிய அரசின் பதில் என்ன? என்று அவர்கள் கேட்டுள்ளனர்.

‘தமிழ்நாட்டில் புதிதாக கேலோ இந்தியா மையங்கள்’

தமிழ்நாடு முழுவதும் மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதியில் கேலோ இந்தியா மையங்களை (கேஐசி) திறக்க அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் குறித்து வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர், கடந்த ஐந்து ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டிலும் இந்த மையங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பை நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்க ள் என்ன என்றும் கேட்டுள்ளார்.

‘பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரி கல்லூரிகள்’

கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் 374 மாதிரி கல்லூரிகளை உருவாக்குவதாக ஒன்றிய அரசு முன்மொழிந்திருந்ததை சுட்டிக்காட்டி அதன் தற்போதைய நிலை என்ன என்று கள்ளக்குறிச்சி திமுக எம்.பி டி. மலையரசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்

* இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்கள் எத்தனை, அதில் அளிக்கப்படும் பயிற்சி விவரங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் சி. என். அண்ணாதுரை மற்றும் ஜி. செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் மையங்கள் எந்தெந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன? தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளாக இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு?என்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

* தமிழ்நாட்டில் ஐடிஐகளின் செயல்பாடு

தமிழ்நாட்டில் செயல்படும் தொழில் பயிற்சி மையங்களின் (ஐடிஐ) விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தருமபுரி மக்களவை உறுப்பினர் அ. மணி கேள்வி எழுப்பியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் தொழில் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள், அதில் வழங்கப்படும் படிப்புகள் மற்றும் சேர்க்கை விவரங்கள் என்ன?

ஐடிஐகளில் கிடைக்கும் பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பின் தரத்தை அரசாங்கம் எவ்வாறு மதிப்பீடு செய்கிறது? புதிதாக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசாங்கம் நிறுவ முன்மொழிந்துள்ள ஐடிஐகளின் விவரங்கள் என்ன? பயிற்சி தரங்களை மேம்படுத்த, வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் கேட்டுள்ளார்.