தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டுக்கு ஜாமீன் இல்லை: சிறப்பு விசாரணை ஆணையம் உத்தரவு
பெங்களூரு: வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யாராவ், ஒன்றிய வருவாய் புலனாய்வு இயக்குனரக (டிஆர்ஐ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும் ஐபிஎஸ் அதிகாரியான அவரது தந்தை ராமச்சந்திர ராவ் பெயரை பயன்படுத்தியதுடன் அவருக்கு வழங்கப்படும் சலுகைகளையும் ரன்யாராவ் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
அவரது கூட்டாளிகளான தருண், சாஹில் ஆகியோரும் கைதாகினர். அவர்கள் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி நடிகை ரன்யாராவ் உள்பட குற்றவாளிகள் மூன்று பேரும் ஒன்றிய வருவாய் புலனாய்வு இயக்குனரக ஆணையத்தில் மனுதாக்கல் செய்தனர், அதை விசாரணை நடத்திய ஆணையம், குற்றவாளிகள் மீது காபிபோசா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் வழக்கு பதிவு செய்த குற்றவாளிகளை ஓராண்டு காலம் ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்ற விதிமுறை உள்ளதால், ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.