Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்: நாளை ஆலப்புழாவில் உடல் தகனம்; கேரளாவில் இன்று பொது விடுமுறை

திருவனந்தபுரம்: கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் வி.எஸ். அச்சுதானந்தன். கடந்த மாதம் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை 3.20 மணியளவில் அச்சுதானந்தனின் உயிர் பிரிந்தது. இதன் பின்னர் அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏகேஜி சென்டருக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அச்சுதானந்தனின் உடலை பார்ப்பதற்காக ஏகேஜி சென்டர் முன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். இதன் பின்னர் அச்சுதானந்தனின் உடல் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது மகனின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் உள்ள தர்பார் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. மதியத்திற்குப் பின்னர் உடல் அச்சுதானந்தனின் சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு கட்சி அலுவலகத்திலும், வீட்டிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும்.

நாளை (23ம் தேதி) மாலை அச்சுதானந்தனின் உடல் ஆலப்புழாவில் உள்ள பெரிய சுடுகாட்டில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும். அச்சுதானந்தனின் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று கேரளாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அச்சுதானந்தனின் மறைவையொட்டி கேரளாவில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

1923ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி ஆலப்புழாவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இவர் பிறந்தார். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு, இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து காங்கிரசில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த அச்சுதானந்தன், 17 வயது முதல் இக்கட்சியில் தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார். 1964ல் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 பேரில் அச்சுதானந்தனும் ஒருவராக இருந்தார். பல முறை எம்எல்ஏவாக இருந்த அச்சுதானந்தன் கடந்த 2006ல் தன்னுடைய 83வது வயதில் கேரளாவின் 20வது முதல்வராக பொறுப்பேற்றார்.