Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலி சான்றிதழ் சர்ச்சையில் சிக்கியவர் மீது அடுத்தடுத்து புகார் விவசாயியை துப்பாக்கியால் மிரட்டிய பெண் ஐ.ஏ.எஸ்சின் தாய்: வீடியோ வைரல்

மும்பை: புனே கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் பூஜா கேத்கர். ஆனால், அங்கு தனி அறை மற்றும் கேபின் கேட்டதுடன், சட்டத்துக்கு புறம்பாக அவரது ஆடி சொகுசு காரில் சிவப்பு சுழல் விளக்கு (சைரன்) பொருத்தி நகரில் வலம் வந்ததால் பூஜா சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து, இவரை பணியிடமாறுதல் செய்யக்கோரி புனே கலெக்டர், தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார். அதன்பேரில், வாஷிமுக்கு பூஜா பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே, குடிமைப் பணிக்கான தேர்வு முகமையில் போலி சான்றிதழ் வழங்கியதாக மீண்டுமொரு சர்ச்சையில் பூஜா சிக்கினார். தந்தை திலீப் கேத்கர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.43 லட்சம் எனவும், ரூ.40 கோடி சொத்து இருப்பதாகவும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் இருப்பதாகவும், கிரீமிலேயர் இல்லை எனவும் சான்றிதழ் சமர்ப்பித்த பூஜா, ஓபிசி இட ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் ஆனது சர்ச்சையை கிளப்பியது.

அதுமட்டுமின்றி, பார்வை குறைபாடு மற்றும் மூளை திறன் குறைபாடு தொடர்பான பிரச்னை இருப்பதாக கூறி மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் சமர்ப்பித்த பூஜா, இது தொடர்பான மருத்துவ பரிசோதனையை பல்வேறு காரணங்களை காட்டி தவிர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கர், புனே முல்ஷி பகுதியில், துப்பாக்கியை வைத்து விவசாயி ஒருவரை மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

பூஜா குடும்பத்துக்கு முல்ஷியில் 25 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், ஆனபோதும் அருகிலுள்ள விவசாயியின் நிலத்தை ஆக்கிரமிக்க அவர்கள் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்து சம்பந்தப்பட்ட விவசாயி புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், புகார் அளித்ததை அடுத்து விவசாயியை மனோரமா கேத்கர் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புனே போலீஸ் எஸ்பியிடம் மகாராஷ்டிரா டிஜிபி ராஷ்மி விரிவான அறிக்கை கோரியுள்ளார்.

திருட்டு வழக்கில் கைதானவரை விடுவிக்க போலீசுக்கு அழுத்தம் திருட்டு வழக்கு ஒன்றில் உத்தர்வாடே என்பவரை நவிமும்பை போலீசார் கைது செய்திருந்தனர். அப்போது, நவிமும்பை போலீஸ் துணை கமிஷனர் பன்சாரேவை போனில் அழைத்த பூஜா, ஐஏஎஸ் அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார். உத்தர்வாடே குற்றம் செய்யாதவர் எனவே அவரை விடுவிக்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்த 2 பக்க அறிக்கையை தயார் செய்த போலீஸ் துணை கமிஷனர் பன்சாரே, போலீஸ் கமிஷனர் மிலிண்ட் பராம்பே மூலம் தலைமைச் செயலாளரும், கூடுதல் உள்துறை செயலாளருமான சுஜாதா சவுனிக்கிடம் சமர்ப்பித்துள்ளார்.