திருவனந்தபுரம்: எரிபொருள் குறைவு மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டு போர் விமானம் 38 நாட்களுக்குப் பின்னர் நேற்று காலை சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. கடந்த மாதம் 14ம் தேதி இந்திய பசிபிக் கடலில் விமானம் தாங்கி கப்பலில் இருந்து பறந்து சென்று போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து நாட்டின் எப்35 பி ரக போர் விமானத்தால் மோசமான காலநிலை காரணமாக மீண்டும் கப்பலில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
நீண்ட நேரம் வட்டமிட்டு பறந்ததால் எரிபொருள் குறைந்ததை தொடர்ந்து அந்த விமானம் அன்று இரவு அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது. தரையிறங்கும் போது விமானத்தில் ஹைட்ராலிக் செயல்பாட்டிலும், ஆக்சிலரி பவர் யூனிட்டிலும் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விமானம் தாங்கி கப்பலில் இருந்த 2 இன்ஜினியர்கள் ஹெலிகாப்டரில் திருவனந்தபுரத்திற்கு வந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் பழுது பார்க்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த 6ம் தேதி இங்கிலாந்தில் இருந்து 14 இன்ஜினியர்கள் அடங்கிய ஒரு குழுவினர் திருவனந்தபுரத்திற்கு வந்து விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 2 வாரங்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டது. தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இது வெற்றிகரமானதை தொடர்ந்து நேற்று காலை 10.45 மணியளவில் இந்த விமானம் ஆஸ்திரேலியா வழியாக இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது.