Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சி’ மற்றும் ‘டி’ குரூப் பணி தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு: புதிய சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் நிறுத்திவைப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்று டாக்டர் சரோஜினி மஹிஷி தலைமையிலான ஆணையம் 20 ஆண்டுக்கு முன் மாநில அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. கடந்த 2013 முதல் 2018 வரை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இந்த பரிந்துரையை நிறைவேற்ற மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால், அது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் முன்பே ஆட்சிக்காலம் முடிந்தது.

இந்த நிலையில், தனியார் துறையில் சி மற்றும் டி குரூப் பணியிடங்களில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ‘‘கர்நாடக தொழில் வேலைவாய்ப்பு சட்டம்-2024 ’’ சட்ட மசோதா கொண்டுவர சித்தராமையா தலைமையில் கடந்த ஆண்டு பதவி ஏற்ற கர்நாடக அரசு முடிவு செய்தது. அதன்படி சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. அந்த மசோதாவுக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த புதிய சட்ட மசோதாவின்படி கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய தனியார் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளில் உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நிர்வாக பொறுப்புகளில் 50 சதவீதம் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நிர்வாகம் அல்லாத பணியிடங்களில் கன்னடர்களுக்கு 75 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் சி மற்றும் டி குரூப் பணியிடங்களில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

இந்த மசோதாவிற்கு தொழில் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூரு வடக்கு இன்டஸ்ட்ரியலிஸ்ட் தலைவரும், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.எப்.ஓ-வுமான டி.வி.மோகன்தாஸ் பய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். இது பாரபட்சமான, பிற்போக்குத்தனமான, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மசோதா. இதுவொரு பாசிச மசோதா. காங்கிரஸ் அரசு இப்படியொரு மசோதாவை கொண்டுவருவதை நம்பவே முடியவில்லை. தனியார் துறையின் ஆட்சேர்ப்பு குழுவில் அரசு அதிகாரி வந்து உட்காருவாரா? வேலைக்கு எடுக்கும்போது மொழித்தேர்வு வைத்தா எடுக்க முடியும்? என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பயோகான் நிர்வாக இயக்குநர் கிரண் மஜும்தர் ஷாவின் எக்ஸ் தள பதிவில், ஐடி நிறுவனங்களுக்கு சாப்ட்வேரில் திறமை மிகுந்த ஊழியர்கள் தேவை. திறமை அடிப்படையில் தான் பணி நியமனம் செய்வோம். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே நோக்கமாக இருந்தாலும், இந்த நடவடிக்கையால் தொழில்நுட்பத்தில் நமது முன்னணி நிலை பாதிப்படைந்துவிடக்கூடாது. இந்த சட்டத்தில் மிகவும் திறமையான ஆட்சேர்ப்புக்கு விலக்கு அளிக்கும் எச்சரிக்கைகள் இருக்க வேண்டும் என்று கிரண் மஜும்தர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை அமல் படுத்தினால் மென்பொருள் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடும் என்று ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்த மசோதா தொடர்பான எக்ஸ் தள பதிவை முதல்வர் சித்தராமையா நீக்கிவிட்டார். அந்த மசோதாவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். விரிவாக ஆலோசனை நடத்திய பிறகே இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

* தகுதியானவர்கள் யார் யார்?

மாநில அரசு கொண்டுவரும் புதிய சட்டத்தின்படி வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்கள் யார் என்பது புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் பிறந்தவராக இருக்க வேண்டும். பிற மாநிலங்களை சேர்ந்தவராக இருந்தால் கர்நாடகாவில் 15 ஆண்டுகளாக வசிக்க வேண்டும். கன்னட மொழியில் எழுதவும் படிக்கவும் பேசவும் தெரிய வேண்டும். மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நோடல் ஏஜென்சிகள் நடத்தும் பயிற்சி மையங்களில் கன்னட மொழி படித்திருக்க வேண்டும்.

* சட்டத்தை மீறினால் ரூ.25 ஆயிரம் அபராதம்

மாநில அரசு கொண்டுவரும் சட்டத்தின் அடிப்படையில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்காமல் சட்டத்தை மீறி செயல்படும் தனியார் தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிக பட்சம் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற அம்சமும் புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. ஒருவேளை சட்டத்தை பின்பற்றாமல் அலட்சியம் காட்டும் தொழிற்சாலைகள் மீது தினமும் ரூ.100 என்ற வகையில் அபராதம் விதிக்கும் அம்சமும் சட்ட மசோதாவில் உள்ளது.

* 3 ஆண்டுகளில் பயிற்சி

கர்நாடக மாநிலத்தில் பிறந்தும் கன்னட மொழி படிக்காமல் இருப்பவர்கள், வேலைவாய்ப்புக்காக வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றுவோர், மாநில அரசின் அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் பயிற்சி மையங்களில் சேர்ந்து கன்னட மொழி படித்து சான்றிதழ் பெற வேண்டும். இதற்காக தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு 3 ஆண்டுகள் வரை காலஅவகாசம் வழங்கப்படும் என்றும் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.