இந்திய கணவருடன் கருத்து மோதலால் மாயம்; ரஷ்ய மனைவி, குழந்தைக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி
புதுடெல்லி: இந்திய தந்தைக்கும், ரஷ்ய தாய்க்கும் பிறந்த குழந்தையை உடனடியாக கண்டுபிடிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தாயும், குழந்தையும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய அவர்கள் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த சாய்கித் பாசு, ரஷ்ய பெண்ணான விக்டோரியா பாசுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் விக்டோரியா இந்தியாவில் வசித்து வருகிறார். கணவன், மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, குழந்தையை யார் வளர்ப்பது என்பது குறித்து தீர்மானிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், வாரத்தில் 3 நாட்கள் குழந்தை தாயிடமும், மீத நாட்கள் தந்தையிடமும் இருக்க கடந்த மே மாதம் 22ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, கடந்த 4ம் தேதிக்கு பிறகு தனது மனைவியையும், குழந்தையையும் காணவில்லை என சாய்கித் பாசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவரின் உதவியுடன் ரஷ்ய தூதரகத்தில் தனது மனைவி தங்கியிருப்பதாக சாய்கித் தரப்பில் கூறப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘நீதிமன்றத்தின் அதிகார வரம்பிலிருந்து தப்பிச் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளதாக குழந்தையின் தந்தை கருதுகிறார். எனவே அந்த குழந்தையை டெல்லி போலீசார் உடனடியாக கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும். மேலும், தாயும் குழந்தையும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய அவர்கள் மீது லுக் அவுட் நோட்டீசை ஒன்றிய அரசு பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ரஷ்ய தூதரகத்தின் உதவியை நாட வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.