பெங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலா கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக கோயில் முன்னாள் பணியாளர் புகார் அளித்துள்ளார். இவ்வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றமே அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கோபாலகவுடா தலைமையில் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ரம்யா, தர்மஸ்தலாவில் பெண்கள் காணாமல் போனது மற்றும் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக எழுந்த புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். வழிபாட்டுத்தலமான தர்மஸ்தலா, மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
இந்த விவகாரத்தில் முறையான, நேர்மையான விசாரணை நடத்தப்படும் என்று நம்புகிறேன். இந்த வழக்கில் உண்மை வெளிவர வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து கூறிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், ‘வழக்கு ஆரம்ப கட்ட விசாரணையில் இருக்கிறது. எனவே போலீசார் விசாரணைக்கு பிறகு தேவைப்பட்டால் எஸ்ஐடி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்’ என்றார்.