புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கூறுகையில்,’ 2024 ஆம் ஆண்டில் சைபர் மோசடிகளால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்புகள் ரூ.22,845.73 கோடியாக இருந்தது. 2023ஆம் ஆண்டு ரூ. 7,465.18 கோடியாக இருந்தது. ஒரே ஆண்டில் சைபர் மோசடி 206 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் நிதி மோசடி சம்பவங்கள் 36,37,288 என பதிவாகியுள்ளன.
2023ஆம் ஆண்டு 24,42,978 ஆக இருந்தது. 2022ஆம் ஆண்டில் 10,29,026 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அடிப்படையில் 9.42 லட்சத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் 2,63,348 செல்போன் ஐஎம்இஐக்கள் அரசால் முடக்கப்பட்டுள்ளன.
இதுவரை, வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட 11 லட்சத்திற்கும் அதிகமான சந்தேக தரவுகளும், 24 லட்சம் கணக்குகளும் உரிய நிறுவனங்களுடன் பகிரப்பட்டு ரூ.4631 கோடிக்கும் அதிகமாக முடக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். ரூ.44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.44,323 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளதாக ஊரக வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் தெரிவித்தார்.