நீதிமன்றங்களில் கழிவறை வசதி குறித்து பல உயர் நீதிமன்றங்கள் அறிக்கை அளிக்கவில்லை: உச்ச நீதிமன்றம் வேதனை
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் போதிய கழிவறை வசதிகளை உறுதி செய்வது தொடர்பாக கடந்த ஜனவரி 15ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அனைத்து நீதிமன்றம், தீர்ப்பாயங்களில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு தனித்தனி கழிவறை வசதிகள் இருப்பதை உயர் நீதிமன்றம், மாநில, அரசுகள் உறுதி செய்ய உத்தரவிட்டது.
இதுதொடர்பாக 4 மாதத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய 25 உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், கொல்கத்தா, டெல்லி மற்றும் பாட்னா ஆகிய உயர் நீதிமன்றங்கள் மட்டுமே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளன.
இந்த வழக்கு நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ‘‘நீதிமன்றங்களில் போதிய கழிவறை வசதியை உறுதி செய்வது குறித்து, பல உயர் நீதிமன்றங்களே அறிக்கை தாக்கல் செய்யாதது வேதனை அளிக்கிறது. அடுத்த 8 வாரத்திற்குள் எஞ்சிய உயர் நீதிமன்றங்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் ஏற்படும். இதுவே கடைசி வாய்ப்பு’’ என உத்தரவு பிறப்பித்தனர்.