புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வீட்டில் ஒன்றிய அமைச்சர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த நிலையில் ஒன்றிய அரசு சார்பில் நேற்று திடீர் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜேபி நட்டா, கிரண் ரிஜிஜூ, பியூஷ்கோயல், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர்கள் எழுப்பும் கோரிக்கைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் அவர்கள் எழுப்ப உள்ள பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.