சென்னையில் இருந்து டெல்லி செல்ல ரூ.33 ஆயிரம் விமான டிக்கெட் ரூ.93,000 ஆக உயர்த்தி விற்பனை: மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி குற்றச்சாட்டு
புதுடெல்லி: ‘விஸ்தாரா விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது ரூ.33 ஆயிரமாக காட்டப்படும் கட்டணம், திடீரென ரூ.93 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி நடக்கிறது’ என மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் நேற்று முன்தினம் நடந்த பட்ஜெட் விவாதத்தில் ஒன்றிய அரசையும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.
அதைத் தொடர்ந்து நேற்று, விமான டிக்கெட் கட்டண முறைகேடு குறித்து அவையில் முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்தார். நேற்று காலை கூட்டத்தொடர் தொடங்கியதும், திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது: சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல விஸ்தாரா விமானத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். விஸ்தாரா ஏர்லைன்ஸ் டாடா நிறுவனத்திற்கு சொந்தமானது. அதன் ஆன்லைன் சாப்ட்வேரை டாடாவின் டிசிஎஸ் நிறுவனம் உருவாக்கி நிர்வகித்து வருகிறது.
முன்பதிவு செய்யும் போது ரூ.33 ஆயிரமாக டிக்கெட் விலை காட்டப்படுகிறது. ஆனால், கட்டணம் செலுத்த செல்லும் போது ‘பிழை’ என வந்து, உடனே டிக்கெட் கட்டணம் ரூ.93 ஆயிரம் அல்லது ரூ.78 ஆயிரம் என உயர்த்திக் காட்டப்படுகிறது. விமான டிக்கெட் ரத்து மற்றும் ரீபண்ட் விவகாரங்களில் மட்டுமே விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி நடக்கிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதை சபாநாயகர் ஓம்பிர்லாவும் ஆமோதித்தார். ‘‘தயாநிதிமாறன் அவைக்கு சுட்டிக்காட்டியிருப்பது தீவிரமான விவகாரம். இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும்’’ என்றார். உடனே, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ‘‘விமான பயணிகள் நலனில் டிஜிசிஏ அக்கறை கொண்டுள்ளது. மூத்த உறுப்பினர் தயாநிதிமாறன் எழுப்பியிருக்கும் விவகாரம் குறித்து நிச்சயம் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்போம். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்’’ என உறுதி அளித்தார்.