தலைநகர் டெல்லியில் அம்பேத்கரின் இறுதிச்சடங்குகளை செய்ய காங். அனுமதிக்கவில்லை: யோகி ஆதித்ய நாத் குற்றச்சாட்டு
லக்னோ: “டெல்லியில் அம்பேத்கரின் இறுதிச்சடங்குகளை செய்ய காங்கிரஸ் அனுமதிக்கவில்லை” என யோகி ஆதித்ய நாத் குற்றம்சாட்டி உள்ளார். இந்திய அரசியலமைப்பு தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கடந்த 1891ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்தார். 1956 டிசம்பர் 6ம் தேதி 65வது வயதில் டெல்லியில் இருந்த அவரது வீட்டில் காலமானார். அம்பேத்கரின் இறுதிச்சடங்குகள் புத்த மரபுகளின்படி நடத்தப்பட்டு, அவரது உடல் மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சைத்ய பூமியில் தகனம் செய்யப்பட்டது.
இன்று நாடு முழுவதும் அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசம் லக்னோவில் நேற்று நடைபெற்ற பாரத ரத்னா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் விருது வழங்கும் விழாவில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஆதித்ய நாத், “அரசியலமைப்பு தந்தை அம்பேத்கரை காங்கிரஸ் கட்சியினர் முதலில் தேர்தலில் தோற்கடித்தனர். அம்பேத்கரின் மறைவுக்கு பிறகு அவரது இறுதிச்சடங்குகளை டெல்லியில் நடத்த காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. அவருக்கு நினைவுச்சின்னம் எழுப்புவதையும் காங்கிரஸ் தடுத்தது. அம்பேத்கரை காங்கிரஸ் அவமானப்படுத்தி விட்டது” என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.