பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையா மைசூருவில் நேற்று அளித்த பேட்டி: தர்மஸ்தலாவின் நூற்றுக்கணக்கான மனித உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள புகாரை தென்கனரா மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிநபர் ஒருவர் கொடுத்த புகாராக இருந்தாலும் அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2003ல் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி காணாமல் போய் இருப்பதாக அவரது தாயாரும் தென்கனரா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.
தர்மஸ்தலாவில் மனித உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் புகாரை விசாரணை நடத்த சிறப்பு விசாரணை படை (எஸ்ஐடி) அமைக்க வேண்டும், தனி நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மாநில அரசுக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.கோபாலகவுடா உள்பட மூத்த வக்கீல்கள் வைத்துள்ளனர். இது சமூக பிரச்னையாக இருப்பதால், மாநில அரசு அலட்சியாக இருக்காது. இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும்.
தர்மஸ்தலா விஷயத்தில் எந்தவிதமான அரசியல் அல்லது வேறு வழியில் நெருக்கடி வந்தாலும், அதற்கு அடிப்பணியாமல், உண்மை நிலையை கண்டறிய என்னென்ன சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமோ, அது மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக தென்கனரா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முதல் கட்ட விசாரணை அறிக்கை கேட்டுள்ளேன்’ என்றார்.