புதுடெல்லி: பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் ஆவணங்களை தர வாக்காளர்களுக்கு தரப்பட்ட அவகாசம் போதாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாடி, ஜேஎம்எம், சிபிஐ, சிபிஐ எம்எல் ஆகிய எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஒன்றாக இணைந்து கூட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதுதவிர மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதால் தேர்தல் ஆணையத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறி உள்ளனர். பீகாரில் மொத்த வாக்காளர்கள் 7 கோடியே 89 லட்சத்து 69 ஆயிரத்து 844 ஆக உள்ளது. இதில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் 7.69 கோடி பேருக்கு (97.42%) வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். பூத் அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் 3 முறை சென்று நிரப்பப்பட்ட படிவங்களை சேரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் வருகை நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும், 2வது வருகை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.


