Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு; பெங்களூரு போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்: கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி

* ஆர்சிபி நிர்வாகிகளை கைது செய்யவும் உத்தரவு

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 17 ஆண்டுகளுக்கு பின் 18வது போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கர்நாடக அரசின் சார்பில் வெற்றி விழா கொண்டாட நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகரின் கப்பன் சாலையில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் 34 ஆயிரம் பேர் மட்டுமே அமரும் வகையில் வசதிகள் உள்ள நிலையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி திவ்யாம்ஷி (14), அக்‌ஷதா பெய் (26), மனோஜ்குமார் (20), ஸ்ரணவ் (20), சிவலிங்கா (17). காமாட்சிதேவி (29), பூமிகா (20), சஹனா (23), பூர்ணசந்திரா (20), பிரஜ்வல் (22) மற்றும் சின்மயஷெட்டி (19) ஆகிய 11 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கர்நாடக கிரிக்கெட் சங்கம், வெற்றி விழா ஏற்பாடு செய்த டிஎன்ஏ ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிர்வாகம் மீது கப்பன் பூங்கா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஆர்.தயானந்த் மற்றும் உயரதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கர்நடக முதல்வர் சித்தராமையா நேற்றிரவு உத்தரவிட்டுள்ளார். 11 பேர் பலியாக காரணமாக இருந்த ஆர்சிபி நிர்வாகிகள், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை கைது செய்ய முதல்வர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்து சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார். 30 நாளில் விசாரணை அறிக்கையை கமிஷன் தாக்கல் செய்யும்.

முன்னதாக பெங்களூருவில் நடந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில், ஐபிஎல் வெற்றி விழாவை விதானசவுதா வளாகத்தில் கொண்டாட தான் அரசு ஏற்பாடு செய்தது. ஆர்சிபி வீரர்கள், சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு வருவதாக தகவல் கிடைத்ததால், ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்தனர். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர், 1,318 போலீசார் உள்பட மொத்தம் 1,483 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். 2.5 லட்சம் பேர் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, தவிர்க்க முடியாத சம்பவம் நடந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்காலிக தலைமை நீதிபதி வி.காமேஷ்வராவ் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், பெங்களூருவில் நடந்த சம்பவம் மிகவும் கொடுமையாக உள்ளது.

மனித உயிருக்கு சமூகத்தில் மதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த சம்பவம் தொடர்பாக முழு விவரம் கொண்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதேபோல் சம்பவம் தொடர்பாக விவரங்களை வழங்க வேண்டும் என்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நிர்வாகம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அடுத்த விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வழக்கு செய்ய வேண்டும் என்று வக்கீல் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.