வங்காளிகளை துன்புறுத்துவதை நிறுத்தாவிடில் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்: பாஜவுக்கு மம்தா எச்சரிக்கை
கொல்கத்தா: வங்காளிகளை துன்புறுத்துவதை நிறுத்தா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாக செய்திகள் வௌியாகின. இதை கண்டித்து கொல்கத்தாவில் கொட்டும் மழையில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் மக்களை துன்புறுத்தவும், சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்யவும் ஒன்றிய அரசு செய்தி அனுப்பி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாடு முழுவதும் வங்கமொழி பேசும் மக்களை துன்புறுத்துவதும், தவறாக வழி நடத்துவதும் பாஜ அரசின் கொள்கையாக உள்ளது.
ஒன்றிய பாஜ அரசின் இந்த அணுகுமுறை குறித்து நான் வெட்கப்படுகிறேன், வருத்தப்படுகிறேன். இதுபோன்ற செயல்களை பாஜ உடனே நிறுத்த விட்டால் அரசியல் ரீதியாக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இனிமேல் நானும் வங்கமொழியில் பேச முடிவு செய்துள்ளேன். உங்களால் முடிந்தால் என்னை தடுப்பு முகாம்களில் அடைத்து வையுங்கள்” என எச்சரித்தார்.