Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணிப்பூரில் ஆயுத கிடங்கு கண்டுபிடிப்பு: அதிநவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல்

இம்பால்: மணிப்பூரில் ஒருபக்கம் பாதுகாப்பு படையினரை மக்கள் விரட்டியடித்த நிலையில், மற்றொரு புறம் ஆயுதக் கிடங்கை கண்டுபிடித்த ராணுவம் அங்கிருந்து துப்பாக்கி, வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தது. மணிப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் இருந்து, ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி, பல தீவிரவாதிகளைக் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக, மெய்தீஸ் ஆயுதக் குழுவான கேசிபி போன்ற அமைப்புகள், இனக்கலவரத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சூழலில், கடந்த திங்களன்று குக்கி மக்கள் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சந்தித்த எதிர்ப்பு, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

மோல்ஹோய் கிராமத்தில் தீவிரவாதி ஒருவரைக் கைது செய்ய முயன்றபோது, ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு படையினரை முற்றுகையிட்டனர். டயர்களை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, தீவிரவாதியைக் கைது செய்ய முடியாமல் பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தக் கடுமையான எதிர்ப்புகளுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும், மணிப்பூரின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாபெரும் ஆயுதக் கிடங்கை பாதுகாப்புப் படையினர் நேற்று கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர். காவல்துறை, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகள் இணைந்து இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தவுபால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் நடத்திய அதிரடி சோதனையில், 86 அதிநவீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றில் ஏகே ரகத் துப்பாக்கிகள், இன்சாஸ் மற்றும் எஸ்.எல்.ஆர் ரகத் துப்பாக்கிகளும் அடங்கும். மேலும், 900க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இது பெரும் வெற்றி என்று காவல்துறை தெரிவித்துள்ளது.